உள்ளூர் செய்திகள்

ஓட்டலில் விற்பனை ஆகாத உணவை பதப்படுத்தி மீண்டும் சப்ளை- ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு

Published On 2023-07-19 12:43 IST   |   Update On 2023-07-19 12:43:00 IST
  • ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
  • சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் விற்பனை ஆகாத உணவை பதப்படுத்தி மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விற்பனை ஆகாத உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும், மேலும் ஓட்டலை உரிய பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை விதித்து உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்னர் மீண்டும் விற்பனையை தொடங்க உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் சுகாதார அதிகாரிகள், உரிய அனுமதியின்றியும் சுகாதார மில்லாமலும் செயல்படும் சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News