பாஸ்ட் புட்டில் உணவு குறைவாக உள்ளதாக ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
- மர்ம நபர்கள் ராஜனை கத்தியால் கை மற்றும் தலையில் வெட்டி உள்ளனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இந்த பாஸ்ட் புட் கடையில் இளைஞர் இருவர் உணவு சாப்பிட்டு விட்டு உணவு குறைவாக உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜனை கத்தியால் கை மற்றும் தலையில் வெட்டி உள்ளனர்.
மேலும் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் பின் பக்க தலையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் ராஜன் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே தப்பி ஓடி உள்ளனர்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.