உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்து 20 ஆண்டுகள் சிகிச்சை அளித்த போலி டாக்டர்

Published On 2022-08-23 07:03 GMT   |   Update On 2022-08-23 07:03 GMT
  • நரசிம்மன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணிபுரிந்து வருவதாக கூறி பொதுமக்களுக்கு தனது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
  • நரசிம்மன் சிகிச்சை குறித்து வேலூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் ஊரக நல அலுவலர் ஆகியோருக்கு புகார் சென்றுள்ளது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தேவிசெட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 40). இவரது மனைவி அரியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நரசிம்மன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணிபுரிந்து வருவதாக கூறி பொதுமக்களுக்கு தனது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது சிகிச்சை குறித்து வேலூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் ஊரக நல அலுவலர் ஆகியோருக்கு புகார் சென்றுள்ளது. அதைத்தொடர்ந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் ஜெயந்தி மற்றும் சுகாதாரத்துறையினர் நரசிம்மன் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து டாக்டர் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மனை கைது செய்தனர்.

Tags:    

Similar News