உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்- 6 பேர் கைது

Published On 2022-11-05 12:42 IST   |   Update On 2022-11-05 12:42:00 IST
  • வயலுார் அகரம் காலனியில் கிருஷ்ணன் கோவிலில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி திருவிழா நடைபெற்றது.
  • மப்பேடு போலீசார் கோவில் நிர்வாகி பெருமாள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த வயலுார் அகரம் காலனியில் கிருஷ்ணன் கோவிலில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி திருவிழா நடைபெற்றது.

இதில் வயலுார் அகரம் காலனி பகுதியில் வசிக்கும் சக்திவேல் (55) என்பவரது வீட்டு அருகே சாமி நிற்காமல் சென்றது. இதனால் சக்திவேல் குடும்பத்தினர் சாமி வீட்டின் முன்பு நிற்காமல் சென்றது குறித்து கோவில் நிர்வாகி பெருமாளிடம் கேட்டனர்.

அப்போது அவர் உங்கள் வீட்டு முன்பு சாமி நிற்காது. இதை ஊர் மக்கள் கூடி முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்தார்கள்.

இதை தட்டிக் கேட்ட சக்திவேல், தம்பிகள் சுந்தரம், பாபு, மற்றும் பாபுவின் மகன் சஞ்சய் ஆகியோரை கோவில் நிர்வாகி பெருமாள் மற்றும் அவரது ஆதரவாளர்களான 10 பேர் சேர்ந்து கத்தி, மற்றும் இரும்பு பைப்பால் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சக்திவேல், சுந்தரம், பாபு, சஞ்சய் ஆகிய 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் கோவில் நிர்வாகி பெருமாள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதில் பெருமாள் என்பவரை கைது செய்த மப்பேடு போலீசார் தலைமறைவாக இருந்த 10 பேரையும் தேடி வந்தனர்.

மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவில் திருவிழாவில் 4 பேரை தாக்கிய வழக்கில் ராஜேஷ், அருண்குமார் பாலா, லட்சுமணன், ராமன் மற்றும் கண்ணுார் கிராமத்தை சேர்ந்த துரை ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News