உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் பலி

Published On 2023-03-07 10:56 IST   |   Update On 2023-03-07 10:56:00 IST
  • புதுவை அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் என்பவரின் மனைவி மல்லிகா சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
  • பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

கடலூர்:

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (வயது 50). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நாட்டு வெடி, வானவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மாசி மக திருவிழாவுக்காக பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் குடோன் தரை மட்டமானது.

இதில் புதுவை அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் என்பவரின் மனைவி மல்லிகா (60) சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.

அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை (34), காசான் திட்டு மலர்கொடி (35), சிவனார்புரம் சக்திதாசன் (25), பட்டாசு குடோன் உரிமையாளர் கோசலை, ஓடெவளி சுமதி (39), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி (35), பாக்கம் கூட்டு ரோடு அம்பிகா (18), காசான்திட்டு செவ்வந்தி (19), லட்சுமி (25) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மலர்கொடி, சக்திதாசன், மணிமேகலை, கோசலை ஆகிய 4 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மணிமேகலை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News