உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் காரை ஒருவழிப்பாதையில் இயக்கி போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர் கைது

Published On 2023-03-19 11:00 IST   |   Update On 2023-03-19 11:01:00 IST
  • சாம்டேனியல் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாம்டேனியலை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சாம் டேனியல் (24). மூலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சாம்டேனியல் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். காளை மாடு சிலையில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி எதிர்திசை (ஒருவழிப்பாதை) யில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். எதிர் திசையில் கார் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்தினர். சாம்டேனியல் காரை மற்றவர்கள் மீது மோதுவது போல் தாறுமாறாக ஓட்டி சென்றார்.

அந்த சமயம் ரோந்து போலீசார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் சாம்டேனியல் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரத்தில் சாம்டேனியல் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மது அருந்தியது தெரிய வந்தது. மேலும் போலீசாரை அவர் தகாதவார்த்தையால் பேசினார்.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாம்டேனியலை கைது செய்தனர். அவர் மீது தகாத வார்த்தையால் பேசியது, வேலை செய்யவிடாமல் தடுத்தது, மது போதையில் வாகனம் ஓட்டியது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சாம்டேனியல் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்த சம்பவத்தால் இரவு காளை மாட்டு சிலை பகுதி அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News