உள்ளூர் செய்திகள்

மேலூர் மின்வாரிய ஊழியர் மரணத்தில் திருப்பம்: கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி

Published On 2022-06-27 11:57 IST   |   Update On 2022-06-27 11:57:00 IST
  • கலியமூர்த்தி வீட்டில் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயம் இருந்தது. இதுபற்றி ஜெனிடா மேலூர் போலீசுக்கு புகார் செய்தார்.
  • அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூரையடுத்த திருவாதவூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகு பிச்சையன்பட்டியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 52). கலியமூர்த்தி மேலூர் மின் வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

கலியமூர்த்தியும், அவரது மனைவி ஜெனிடாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு தேவி (24) என்ற மகள் உள்ளார். அவருக்கும், ராஜகோபால் என்பவருக்கும் சமீபத்தில் திருமணமாகி தற்போது தேவி கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கலியமூர்த்தி வீட்டில் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயம் இருந்தது. இதுபற்றி ஜெனிடா மேலூர் போலீசுக்கு புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து கைது செய்ய மதுரை எஸ்.பி. சிவபிரகார் உத்தரவிட்டார். அதன் பேரில் மேலூர் டி.எஸ்.பி பிரபாகரன் ஆலோசனையின்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

கலியமூர்த்தி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து கணவர் எதையும் கேட்காமல் தனது இஷ்டப்படி நடந்ததால் அவரை கொலை செய்ய அவரது மனைவி ஜெனிடா திட்டமிட்டுள்ளார். அதனை செயல்படுத்த அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களின் உதவியை நாடியுள்ளார்.

சம்பவத்தன்று ஜெனிடாவும், அவரது மகள் தேவியும் வெளியே சென்ற நேரத்தில் ஏற்கனவே பேசி இருந்தபடி 3 நபர்களையும் வீட்டிற்கு சென்று கணவரை கொலை செய்யும்படி ஜெனிடா கூறியுள்ளார். அதன்படி வீட்டுக்கு சென்ற 3 நபர்களும் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த கலியமூர்த்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஜெனிடா மற்றும் 3 நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 3 நபர்களில் ஒருவர் மட்டும் 18 வயதுடையவர். மற்ற இருவரும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலூரில் மனைவியே கூலிப்படை மூலம் கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News