உள்ளூர் செய்திகள்

திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டம்: 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி

Published On 2023-04-18 14:15 IST   |   Update On 2023-04-18 14:15:00 IST
  • திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தனது கணவரை சூதாட்ட வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து பழி வாங்குகின்றது.
  • திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த திமுகவினர் மூன்று கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முறையான வரவு-செலவு கணக்கு காண்பிக்கவில்லை எனக்கூறி 13-வது வார்டு திமுக கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் குற்றம்சாட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் மர்ம நபர்கள் சிலர் திமுக பெண் கவுன்சிலர் ஆபாசமாக இருப்பதாக கூறி பிட் நோட்டீசுகளை ஆரணி பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வீசிவிட்டு சென்றனர். இதை அறிந்த சிலர் உடனடியாக அந்த பிட் நோட்டீசுகளை பஜார் வீதியில் இருந்து சேகரித்துக் கொண்டு சென்று எரித்தனர்.

இந்நிலையில்,13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தனது கணவரை சூதாட்ட வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து பழி வாங்குகின்றது. தொடர்ந்து எங்களது குடும்பத்தின் மீது சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று ஆடியோவை வெளியிட்டு விட்டு நேற்று மாலை தனது வீட்டில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இச்செய்தி ஆரணி பகுதியில் காட்டு தீயாக பரவியது. திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News