உள்ளூர் செய்திகள்

மாடு விடும் விழாவில் மாலை மரியாதை செய்வதில் மோதல்- தி.மு.க. பேரூராட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல்

Published On 2023-01-18 06:07 GMT   |   Update On 2023-01-18 06:07 GMT
  • ஒடுகத்தூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
  • பேரூராட்சி தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம்.

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மாடு விடும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது தி.மு.க. பேரூராட்சி தலைவர் சத்தியவதியின் கணவர் பாஸ்கரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. பேரூராட்சி தலைவரின் தம்பி குபேந்திரன் (45), என்பவர் எங்கள் குடும்பத்தினருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்று தகராறு செய்துள்ளார்.

இதனால் பாஸ்கரனுக்கும், குபேந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் பாஸ்கரன் அண்ணா நகர் பகுதிக்கு சென்றார்.

அவரை வழிமறித்த குபேந்திரன் பாஸ்கரனை சரமாரியாக தாக்கியுள்ளார். அதேபோல், அங்கிருந்த 5 பேர் பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த பாஸ்கரன் உறவினர்கள் அவரது மனைவியும் பேரூராட்சி மன்ற தலைவருமான சத்தியாவதி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஒடுகத்தூர் பஸ்நிலையம் வந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஒடுகத்தூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக ஒடுகத்தூர் பஸ்நிலையம் வரும் அனைத்து பஸ்களும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பு தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இன்று காலை பாஸ்கரனை தாக்கியவர்களை கைது செய்வதாக கூறிய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒடுகத்தூரில் இன்று 2-வது நாளாக கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒடுகத்தூர் பஜார் வீதி வெறிச்சோடியது.

Tags:    

Similar News