உடுமலை சாலை மறியல் போராட்டத்தில் தி.மு.க.,-அ.தி.மு.க.வினர் பயங்கர மோதல்
- அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்தோஷ் கவுதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது.
- தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது தி.மு.க.வை சேர்ந்த சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி மற்றும் தி.மு.க.வினர் பேச்சு வார்த்தை நடத்த வந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது அ.தி.மு.க.- தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில், தி.மு.க. பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரனின் மண்டை உடைந்தது.
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்தோஷ் கவுதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தி.மு.க.வை சேர்ந்த பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தோஷ் கவுதம், கருப்புசாமி ஆகியோர் மீது குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை அருகே தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.