உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Published On 2023-10-28 06:29 GMT   |   Update On 2023-10-28 06:29 GMT
  • புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து மின்வேலி அமைத்து நெல் பயிர் செய்து வந்தனர்.
  • மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொன்னேரி:

பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் சுமார் 980 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும் கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஏரியின் வெளிப்புற கரைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தீவன மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஏரிக்கு சொந்தமான இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து மின்வேலி அமைத்து நெல் பயிர் செய்து வந்தனர். இதனால் கால்நடைகள் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்பு ஏரி நிலத்தை மீட்க கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் போராட்டத்திற்கு பின்பு வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் மீண்டும் நெல் பயிர் செய்து அப்பகுதி மக்களை மிரட்டி வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாதுகாப்பு வழங்கவும் கோரி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சார் ஆட்சியர் ஐஸ்வர்யா மற்றும் வட்டாட்சியர் மதிவாணனிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News