திண்டுக்கல் அருகே கை, கால்களை கட்டி ஜல்லிக்கட்டு வீரர் கொலை
- ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து வளர்த்து வந்ததுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளையும் அடக்கி வந்துள்ளார்.
- கொலை நடந்த இடத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி ஊராட்சி கொல்லப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இங்குள்ள பயன்பாடற்ற கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய தேடுதல் பணி நள்ளிரவு 1 மணி வரை நீடித்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தது.
அழுகிய நிலையில் கிடந்த அந்த வாலிபரின் பனியனில் ராம் பாய்ஸ் கபடி குழு என எழுதப்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். உடலுடன் கல்லைக் கட்டி, கை, கால்களும் கட்டப்பட்டு இருந்ததால் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டது. உறுதியானது.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் மணி (வயது 23) என தெரிய வந்தது.
இவர் ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து வளர்த்து வந்ததுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளையும் அடக்கி வந்துள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கொலை நடந்த இடத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.