திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது.
- கல்வி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ மாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது.
நேற்று இரவு இந்த அலுவலகம் முன்பு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அமைச்சுப் பணியாளர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாபு, கல்வி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ மாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மூத்த ஆலோசகர் மதியழகன், மாநில இணை செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஊதியம் வழங்காததை கண்டித்தும், ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள்.