உள்ளூர் செய்திகள்

செய்யூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் அதிரடி இடமாற்றம்

Published On 2022-09-13 07:51 GMT   |   Update On 2022-09-13 07:51 GMT
  • வாரந்தோறும் ரூ.1500 கூடுதலாக பணம் தரவேண்டும் என்று சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
  • ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாத சாராய வியாபாரி தான் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு லஞ்சமாக வாரந்தோறும் அனுப்பிய கூகுள் பே விபரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

மதுராந்தகம்:

செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் மோகனசுந்தரம், பாபு. இவர்கள் வெடால் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரியிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபான வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து லஞ்சமாக பணம் பெற்றனர்.

இதற்காக வாரந்தோறும் இருவருக்கும் தலா ரூ.1000 சாராய வியாபாரி கொடுத்ததாக தெரிகிறது. இதனை அவர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன சுந்தரம் மற்றும் பாபுவுக்கு கூகுள் பே மூலம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் வாரந்தோறும் ரூ.1500 கூடுதலாக பணம் தரவேண்டும் என்று சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாத சாராய வியாபாரி தான் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு லஞ்சமாக வாரந்தோறும் அனுப்பிய கூகுள் பே விபரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் வாங்கிய லஞ்ச பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியான சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீஸ் உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சாராய வியாபாரியிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகனசுந்தரம், பாபு ஆகிய இருவரும் மாவட்ட ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சாராய வியாபாரியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News