உள்ளூர் செய்திகள்

பஸ், வேன்களுக்கு அனுமதி இல்லாததால் காஞ்சிபுரத்தில் சுற்றுலா பயணிகள் கடும் அவதி

Published On 2023-03-11 12:03 IST   |   Update On 2023-03-11 12:03:00 IST
  • காஞ்சிபுரம் நகருக்குள் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
  • காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அருகில் நிறுத்தப்பட்டன.

காஞ்சிபுரம்:

சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், கைலாசநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட 11 பழமையான கோவில்கள் உள்ளன. இங்கு பஸ் மற்றும் வேன்களில் சுற்றுலா வரும் பயணிகள் கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு பஸ் நிலையம் அருகே காந்தி சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பட்டுச்சேலைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

இங்கு வார நாட்களில் 10 முதல் 15 பஸ்களிலும், வார இறுதி நாட்களில் சுமார் 40 பஸ்களிலும் பயணிகள் சுற்றுலா வருவார்கள். இதனால் காஞ்சிபுரத்தில் சுற்றுலா களைகட்டி வந்தது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் மா.ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தற்காலிகமாக புதிய போக்குவரத்து ஒழுங்கு முறையை அமல்படுத்தினர்.

இதையடுத்து காஞ்சிபுரம் நகருக்குள் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அருகில் நிறுத்தப்பட்டன. அங்கு பஸ்களை நிறுத்த ரூ.300 கட்டணமும், வேன்களுக்கு ரூ.150 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு நடந்தோ அல்லது ஆட்டோக்களிலோ மட்டுமே செல்ல முடிகிறது. ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளில் விடுமுறை தொடங்க இருப்பதால் ஏராளமானோர் காஞ்சிபுரம் நகருக்கு சுற்றுலா செல்வார்கள். ஆனால் சுற்றுலா பஸ்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா செல்ல பயணிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இதனால் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-

சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களை காஞ்சிபுரம் நகருக்குள் அனுமதிக்காததால் பயணிகள் பல இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் பலர் வயதானவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் நடக்க சிரமப்படுகின்றனர்.

மேலும் இங்கு சாலையோரம் உள்ள பிளாட்பாரங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஆக்கிரமிப்பு இல்லாத சாலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும். சீரான போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற காஞ்சிபுரம் நகரில் வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் காஞ்சிபுரம் சுற்றுலா நகராக வளர்ச்சி அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News