உள்ளூர் செய்திகள்

வைரஸ் பாதித்து இறந்த கோழிகளை கொண்டு வந்த வாகனம்.

பழனி அருகே வைரஸ் பாதித்த கோழிகளை தோட்டத்தில் புதைக்க முயற்சி- பொதுமக்கள் வாக்குவாதம்

Published On 2022-10-16 08:42 GMT   |   Update On 2022-10-16 08:42 GMT
  • கோழிகளை வயலூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் புதைப்பதற்காக கொண்டு வந்தனர்.
  • சுற்றுவட்டார பகுதி மக்கள் கோழி வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டியில் தனியார் கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்குள்ள 4000 கோழிகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டன.

அந்த கோழிகளை வயலூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் புதைப்பதற்காக கொண்டு வந்தனர். இதைபார்த்ததும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோழி வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தோட்டத்தில் புதைக்க கூடாது எனக்கூறி அவர்கள் முற்றுகையிட்டனர்.

அதனைதொடர்ந்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் நிறுவனத்தார் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது. மேலும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 4000-க்கும் மேற்பட்ட கோழிகளை இப்பகுதியில் புதைத்தால் பொதுமக்களுக்கு நோய் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே கால்நடைத்துறை டாக்டர்கள் இதனை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News