உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2024-03-12 07:22 GMT   |   Update On 2024-03-12 07:22 GMT
  • ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
  • ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் இடலாக்குடி புத்தன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 26). திருமணமான இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.

இவருக்கும் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஜெய்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜெய்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வந்துள்ளார்.

அவர் கள்ளக்காதலி வீட்டுக்குத் தான் செல்வார் என கருதிய அவரது மனைவி, உறவினர் ஒருவர் துணையுடன் ஜெய்குமாரை பின் தொடர்ந்து வந்தார். கள்ளக்காதலி வீட்டுக்கு ஜெய்குமார் வந்த போது, திடீரென அவர் முன்பு மனைவி வந்துள்ளார். இதனால் ஜெய்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெய்குமாரை, மனைவியும் உறவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் ஜெய்குமார் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வரவேற்பாளராக இருந்த அஜய் (21) விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென ஜெய்குமார், போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார்.

இதனை தடுக்க முயன்ற அஜய் மீதும் கண்ணாடியால் குத்தி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஜெய்குமார், தனது உடலிலும் கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.

சம்பவம் குறித்து போலீஸ் நிலைய வரவேற்பாளர் அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்குமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News