உள்ளூர் செய்திகள்

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் நியமனம்

Published On 2023-12-15 10:25 GMT   |   Update On 2023-12-15 10:25 GMT
  • பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
  • ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள சுமார் 20 கிராமங்களில் 3 ஆயிரத்து 774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியாள நாள் முதலே கிராமமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள், பணியாற்ற உள்ளனர். மேலும் இந்த அதிகாரிகளின் கீழ் 24 தாசில்தார்கள், 24 துணை தாசில்தார்கள், சர்வேயர், வருவாய் ஆய்வாளர்கள், 326 வருவாய் துறை ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிலம் எடுப்புக்காக பணியாற்ற உள்ளனர். நில எடுப்புக்கு நியமிக்கப்பட உள்ள மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில் முதற்கட்டமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் நில எடுப்பு அலுவலகம் செயல்பட இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News