உள்ளூர் செய்திகள்
அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அமராவதி ஆற்றில் பாய்ந்தோடுவதை படத்தில் காணலாம்.

தொடர்ந்து நிரம்பி வழியும் உடுமலை அமராவதி அணை- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-09-09 04:19 GMT   |   Update On 2022-09-09 04:19 GMT
  • தென்மேற்கு பருவமழை காலம் அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
  • ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது.

வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான அளவு நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் அமராவதி அணை நிரம்பி 7 முறை உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மத்தியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கியது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த ஜூலை 15-ந்தேதி நீர்மட்டம் 88 அடியை தாண்டியதால் 9 கண் மதகு வழியாக தொடர்ந்து 5 நாட்கள் நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2-வது முறையாக கடந்த 4-ந்தேதி 8 மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு10 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. பின்னர் நீர் வரத்து குறைந்ததை அடுத்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

அணை நீர்மட்டம் 85 அடி தாண்டினாலே 9 கண் ஷட்டர் வழியாக நீர் கசிந்து வெளியேற தொடங்கி விடும். கடந்த 54 நாட்களாக நீர்மட்டம் 87 அடிக்கு மேல் இருப்பதால் 9 கண் மதகுகள் வழியாக தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News