ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- ஒரே மோட்டார் சைக்கிளில் வடபழனியில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றனர்.
- பலியான முனியப்பனின் உடல் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆலந்தூர்:
சேலையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்கள் முனியப்பன் (வயது21).அன்புமணி (21). நண்பர்களான இருவரும் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வடபழனியில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றனர். பின்னர் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அவர்கள்வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அன்புமணி மோட்டார்சைக்கிளை ஓட்டினார். முனியப்பன் பின்னால் அமர்ந்து இருந்தார். ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்பு மணியும், முனியப்பனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனியப்பன் பரிதாபமாக இறந்தார். அன்பு மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முனியப்பனின் உடல் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.