உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

Published On 2023-03-05 17:00 IST   |   Update On 2023-03-05 17:00:00 IST
  • பள்ளி கல்லூரி, மாணவர்கள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  • படப்பை, செரப்பணஞ்சேரி பகுதியில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

படப்பை:

படப்பை, கரசங்கால் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் - வாலாஜாபாத் செல்லும் 6 வழி சாலை வரதராஜபுரம், கரசங்கால், படப்பை வழியாக செல்கிறது. இந்த சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை பகுதியில் முக்கிய இடமாக மணிமங்கலம் கரசங்கால், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பகுதி உள்ளது. இங்கு பள்ளி கல்லூரி, மாணவர்கள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதேபோல் படப்பை, செரப்பணஞ்சேரி பகுதியில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த இடங்களில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் காலை, மாலை நேரங்களில் அதிவேகமாக வரும் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

அப்படியே சாலையை கடக்க முற்பட்டால் விபத்து ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. எனவே கரசங்கால், படப்பை, செரப்பணஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தவும் இந்த 2 பகுதிகளிலும் சிக்னல் அமைக்கவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News