உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 6 அடுக்கு வாகன நிறுத்தும் வளாகம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது

Published On 2022-07-07 10:03 GMT   |   Update On 2022-07-07 10:03 GMT
  • சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதி உட்பட கார் நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.
  • அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் முகப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 3.36 லட்சம் சதுர மீட்டரில் 6 அடுக்கு வாகன நிறுத்த வளாகம் கட்டப்படுகிறது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவர்களை இறக்கி விடவும், வருபவர்களை ஏற்றி செல்லவும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கார்கள் வந்து செல்கின்றன.

சென்னை விமான நிலையத்தில் தனியார் கார் பார்க்கிங், பிரீபெய்டு கார்கள் பார்க்கிங், ஓலா, உபேர் கால் டாக்சி பார்க்கிங், பயணிகளின் கார்கள் என தனி பார்க்கிங் வசதி உள்ளது.

ஆனால் சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதி உட்பட கார் நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் முகப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 3.36 லட்சம் சதுர மீட்டரில் 6 அடுக்கு வாகன நிறுத்த வளாகம் கட்டப்படுகிறது. இதில் கார் பார்க்கிங், வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வு அறைகள் கட்டப்படுகிறது.

தற்போது இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கார் நிறுத்தும் வளாகம் அடுத்த மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய பிரதிநிதிகள், ஒலிம்பியா நிறுவன அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆகஸ்ட் 1-ந்தேதி 2400 கார்களை நிறுத்தும் திறன் கொண்ட ஆறு அடுக்கு கார் நிறுத்த வளாகத்தை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை சென்னை இந்திய விமான நிலையங்கள் ஆணைய தலைவர் திறந்து வைப்பார் என்று தெரிகிறது.

Tags:    

Similar News