பிரபல நிறுவனத்தின் பெயரில் 5 ஆயிரம் கிலோ போலி வாஷிங் பவுடர் பறிமுதல்- 2 பேர் கைது
- பிரபல வாஷிங் பவுடரின் பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களை இடமாற்றி அதே மாதிரியான டிசைனிங் பாக்கெட்டுகளை தயாரித்து கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
- கவரைப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே பண்பாக்கம் பகுதியில் போலி வாஷிங் பவுடர் மூட்டைகளை பதுக்கி பாக்கெட் போட்டு கடைகளில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கவரப்பேட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரம் பண்பாக்கம் பகுதி சர்வீஸ் சாலையில் உள்ள கிடங்கு ஒன்றில் 5000 கிலோ போலி வாஷிங் பவுடர் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை-ஆந்திரா எல்லையான தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் இதனை யாரும் கண்டு கொள்ளாதவாறு குடோன் அமைத்து செயல்பட்டு வந்தனர்.
பிரபல வாஷிங் பவுடரின் பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களை இடமாற்றி அதே மாதிரியான டிசைனிங் பாக்கெட்டுகளை தயாரித்து கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது. போலி வாஷிங் பவுடர் தயாரித்த அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமித் (வயது 26), அஜய் (வயது 19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கவரைப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.