ஆரணியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
- 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
- காட்டன் சூதாட்டத்தின் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை காட்டிய இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் காட்டன் சூதாட்டம் கொடிக்கட்டி பறப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே, அவரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மற்றும் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், வெங்கடேசன், தியாக ராஜன், ராஜ்குமார் மற்றும் போலீசார் ஆரணி பஜார் வீதியில் நேற்று கண்காணித்தனர்.
அப்பொழுது ஆரணி புதிய இருளர் காலனியை சேர்ந்த ரெனால்ட் என்ற கார்த்திக் (32), விஜயன் (48), நாகராஜ் (31), அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (56), எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்த நாகூர் (40) ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.5,450 மற்றும் நோட்டு, வெள்ளை பேப்பர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், 5 பேரையும் பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் அனைவரையும் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். காட்டன் சூதாட்டத்தின் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை காட்டிய இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.