மதுரையில் தொடர் மழை காரணமாக 35 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது
- அண்மையில் காக்கா தோப்பு பகுதியில் மழை காரணமாக 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- விபரீதம் ஏற்படும் முன் பழமையான கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை:
மதுரை ஹார்வி நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அதே பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் ஓட்டு வீடு உள்ளது. 35 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டை நாகராஜ் பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தார். மேலும் இதில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த வீட்டின் அருகே உணவகம் நடத்துவோர் பொருட்களை வைக்க இந்த வீட்டை பயன்படுத்தி வந்தனர். பழமையான வீடு என்பதால் கட்டிடம் உறுதி தன்மை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் வீட்டின் சுவர்கள் மற்றும் ஈரத்தன்மையுடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு உணவகத்தில் பணிபுரியும் பிரசாத் என்பவர் பொருட்களை எடுக்க அந்த வீட்டிற்கு சென்றார். கதவை திறக்க முயற்சித்த போது திடீரென வீட்டின் சுவர் சீட்டுக்கட்டு போல் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பிரசாத் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தினர்.
அண்மையில் காக்கா தோப்பு பகுதியில் மழை காரணமாக 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை நகரின் மையப்பகுதியில் இது போன்ற பழமையான கட்டிடங்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உறுதித்தன்மை இல்லாமல் உள்ளது.
எனவே விபரீதம் ஏற்படும் முன் பழமையான கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.