6-வது கொண்டை ஊசி வளைவில் அரசு பஸ்-லாரி மோதி விபத்து
- சத்தியமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இந்த திம்பம் மலைப்பாதை வழியாக சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.
இந்த மலைப்பாதையில் அவ்வப்போது லாரிகள் பழுதாகி நிற்பதும், விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு பஸ் இன்று திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.
அப்போது திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்ப முற்பட்டபோது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே வந்த லாரியின் வலதுபுறம் பஸ் எதிர்பாராத விதமாக மோதி நின்றது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். எதிரே வந்த லாரியின் மீது பஸ் லேசாக மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டதோடு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.