முன்விரோதத்தில் 3 பேர் காரில் கடத்தல்: போலீசார் வாகன சோதனையில் மடக்கி பிடித்தனர்- 5 பேர் கைது
- கடத்தல் கும்பல் திருநின்றவூர் வழியாக செல்லும் போது செவ்வாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (24), அஜித் (23).இவர்கள் 2 பேரையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஆரோன், பிரதாப், பீட்டர், பாலாஜி, கருணாகரன் என்கிற மணி ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து மிரட்டி உள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சுரேஷ், அஜித், ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேஷ் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது.
இதனை அறிந்த ராஜேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருவள்ளூர் அடுத்த அயத்துார் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சுனில், அஜித் மற்றும் அவர்களது நண்பர் சுரேஷ் ஆகிய 3 பேரை கத்தியால் தாக்கி 2 கார்களில் கடத்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே கடத்தல் கும்பல் திருநின்றவூர் வழியாக செல்லும் போது செவ்வாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 காரையும் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார்கள் நிற்காமல் சென்றன. இதையடுத்து போலீசார் சுமார் 2 கி.மீட்டர் தூரம் வாகனத்தில் விரட்டிச்சென்று 2 கார்களையும் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் கார்களில் இருந்த 5 பேர் கும்பல் சுனில், அஜித் மற்றும் அவர்களது நண்பர் சுரேஷ் ஆகிய 3 பேரையும் முன்விரோதத்தில் கடத்தி செல்வது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கருணாகரன் என்கிற மணி, அருண்பாபு என்கிற ஆரோன், புருேஷாத்தமன் என்கிற பீட்டர், ஜெயபிரதாப், தேவ் ஆனந்த்ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதில் தப்பி ஓடியவர் ராஜேஷ் என்பது தெரியவந்தது. அவரை செவ்வாப்பேட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கார்கள், 3 பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலுக்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.