உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையம் அருகே குடிசைகளுக்கு தீ வைத்த 3 பேர் கைது

Update: 2023-03-28 05:11 GMT
  • குடிசை வீட்டிற்கு அருகிலே இருந்த கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது.
  • பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டில் கடந்த 21-ந் தேதி இரவு வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இதில் குடிசை வீட்டிற்கு அருகிலே இருந்த கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது.

இதே நாளில் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கூரை வீட்டிற்கு தீ வைத்த மர்மநபர்கள், வடகரை யாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டில் மண்எண்ணை குண்டுகளை வீசி சென்றனர்.

இதையடுத்து, பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இதில் தொடர்புடைய வடகரை யாத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தர்மராஜ் (30), ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரவீன் என்கிற பரமசிவம்(28), அதே பகுதியைச் சேர்ந்த கோட்டையப்பன் மகன் சுதாகர் (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News