ஓசூரில் மதுபோதையில் வடமாநில தொழிலாளியை குத்தி கொன்ற 3 பேர் கைது
- வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து விகாஷ்குமாரை சரமாரியாக குத்தினர்.
- போதையில் இருந்ததால் விகாஷ்குமார் இறந்ததும் தங்களுக்கு தெரியாது என்று அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
ஓசூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விகாஷ் குமார் (21). இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், மேலாக வேலை செய்து வந்தார்.
மேலும், ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் பாபு ரெட்டி என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் இவரது நண்பர் பீகாரை சேர்ந்த சிவம் குமார்(19) என்பவருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று விகாஷ் குமார் அந்த வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த விகாஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் சிவம்குமார் மற்றும் நண்பர்களான மேற்குவங்கத்தை சேர்ந்த தன்மராய் (21) மற்றும் சுஷாந்தா தேப்சிங்கா (21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது விகாஷ்குமார் புதிதாக செல்போன் வாங்கியதை கொண்டாட, நண்பர்கள் மது விருந்து கேட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விகாஷ்குமார், தனது வீட்டில் மது விருந்து வழங்கியுள்ளார். அப்போது போதை தலைக்கேறி, அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து விகாஷ்குமாரை சரமாரியாக குத்தினர். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
போதையில் இருந்ததால் விகாஷ்குமார் இறந்ததும் தங்களுக்கு தெரியாது என்று அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.