குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் இன்று சென்னை வந்தனர்
- 26 பேரையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
- தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
தமிழகத்தில் இருந்து குஜராத் மாநிலம் பாவ் நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது 26 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கினர்.
குஜராத் அருகே மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் சென்ற பஸ் சிக்கிக்கொண்டது. அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை குஜராத் அரசுடன் பேசி மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக ரெயில் மூலம் சென்னை அனுப்பி வைத்தனர். அதிகாலை 5.30 மணிக்கு சென்ட்ரல் நிலையத்திற்கு ரெயில் வந்தது.
அதில் வந்த 26 பேரையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்பு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மீட்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை வந்த மக்கள் கூறியதாவது:-
குஜராத்தில் பெய்த தொடர் மழையில் நாங்கள் சென்ற வாகனம் தரை பாலத்தில் சிக்கி கொண்டது. வெள்ள நீர் மெல்ல மெல்ல உயர்ந்த போது என்ன செய்வது என்று தவித்த நிலையில் அங்கிருந்த அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் குஜராத் அரசிடம் பேசி எங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தனர். பாதுகாப்பாக சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.