சென்னை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
- வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி தங்கம் கடத்தல் நீடிக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவர்கள் உள்ளாடையில் மறைத்து தங்கத்தை கடத்தி வைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 860 கிராம் தங்க கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த ஆண்பயணி ஒருவரிடம் 378 கிராம் தங்க கட்டி மற்றும் 90 கிராம் தங்கச் செயினை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.67 லட்சம் ஆகும். ஒரு கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.