உள்ளூர் செய்திகள்

கடலூர் சிறை அதிகாரி குடும்பத்தை கொல்ல முயற்சி- பிரபல ரவுடியின் தம்பி உள்பட 2 பேர் கைது

Published On 2022-09-04 10:31 IST   |   Update On 2022-09-04 10:31:00 IST
  • கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார்.
  • கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடலூர்:

கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மத்திய சிறைச்சாலை எதிரில் சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த 28 ந்தேதி அதிகாலை வீட்டில் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் பார்த்ததால் அனைவரும் தப்பித்தனர்.

இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்

இந்த நிலையில் போலீசார் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 2000 செல்போன் எண்கள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதனை முழுமையாக சோதனை செய்து பார்த்ததில் சிறை வளாகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து சென்னை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பேசியது தெரிய வந்தது.

உடனே போலீசார் இதுபற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் சிறைக்காவலர் செந்தில்குமார் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர் யாரிடம் பேசி உள்ளார் என துப்புதுலக்கிய போது சிறைக்காவலர் செந்தில்குமார் 10-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் பேசியது அம்பலமானது. அவர் ரவுடிகளை ஏவி சிறை அதிகாரிகளை கொல்ல பேரம் பேசி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிறை காவலர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சென்னையை சேர்ந்த வக்கீல் தினேஷ் என்பவர், சிறைக்காவலர் செந்தில்குமாருக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், சிறை காவலர் செந்தில்குமார் ரவுடிகள் மூலம் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சி, சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் செல்போன்கள் சிக்னலை வைத்தும் துப்பு துலக்கினர். அப்போது இந்த சம்பவத்தில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த மதிவாணன் (வயது 27), மவுலிதரன் (27) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இன்று அதிகாலை 2 பேரையும் கைது செய்தனர்.

கைதான மதிவாணன் சென்னையை சேர்ந்த பிரபலரவுடி தனசேகரின் தம்பி ஆவார். கைதான 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News