உள்ளூர் செய்திகள்

மண்டபம் அருகே தண்ணீர் கேன்களில் அடைத்து இலங்கைக்கு உரம் கடத்த முயற்சி- கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

Published On 2022-11-28 05:11 GMT   |   Update On 2022-11-28 05:11 GMT
  • உரத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த சாதிக் அலி என்பவரது நாட்டுப்படகில் உரத்தை கடத்த திட்டமிட்டிருந்த தகவலை தெரிவித்தனர்.

பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபத்தில் வேதாளை கடற்கரை சாலை பகுதியில் கடலோர காவல்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அந்த காரில் கீழக்கரை சங்குலி தெருவை சேர்ந்த சார்பாஸ் நவாஸ் (வயது 42), ஜெயினுதீன் (45) ஆகிய 2 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர், அவர்களது காரை சோதனை செய்தனர்.

அப்போது அவர்களது காரில் ஏராளமான பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உள்ளே உரம் நிரப்பப்பட்டிருந்தது. அதுபற்றி நவாஸ் மற்றும் ஜெயினுதீனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் உரத்தை தண்ணீர் கேனில் அடைத்து, நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்களது காரில் ஒரு கேனில் தலா 12 கிலோ வீதம் 30 பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களில் 350 கிலோ உரம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றையும், உரத்தை கடத்திச் செல்ல பயன்படுத்திய காரையும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உரத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சார்பாஸ் நவாஸ், ஜெயினுதீன் ஆகிய இருவரும் மண்படத்தில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? யார் மூலம் உரத்தை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தனர்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மண்டபம் அருகே உள்ள வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த சாதிக் அலி என்பவரது நாட்டுப்படகில் உரத்தை கடத்த திட்டமிட்டிருந்த தகவலை தெரிவித்தனர்.

அவரிடமும் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. அவரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சார்பாஸ் நவாஸ் கீழக்கரை நகராட்சியில் 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ஜெய்னுதீன் முன்னாள் கவுன்சிலர் ஆவார். 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News