கொள்ளை நடந்த வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடக்கும் காட்சி.
ராஜபாளையம் அருகே என்ஜினீயர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
- வீடு திரும்பிய ரோஜா ராணி, தனது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை மாயமாகி உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவர் ஐதராபாத்தில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரோஜாராணி மீனாட்சிபுரம் கல்லுப்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அருகில் உள்ள 2 வீடுகளில் சூரியபிரகாஷின் சகோதரர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 3 குடும்பத்தினரும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு மதுரை வாடிப்பட்டி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடு புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகையை திருடிவிட்டுச் சென்று விட்டனர்.
வீடு திரும்பிய ரோஜா ராணி, தனது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை மாயமாகி உள்ளது.
இதனால் தனது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து நகையை திருடியிருப்பதை அறிந்த அவர் இதுபற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.