உள்ளூர் செய்திகள்

காவல்துறை தலைமையகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பறவைகளுக்கு தண்ணீர் வைத்த காட்சி

கோடை வெயில் தாக்கம்- பறவைகள், விலங்குகளுக்கு போலீஸ் நிலையங்களில் தொட்டி அமைத்து தண்ணீர்

Published On 2023-04-12 15:49 IST   |   Update On 2023-04-12 15:49:00 IST
  • கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும்.
  • டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.

சென்னை:

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மனிதர்களே வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகிறார்கள்.

வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் எனக்கருதி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் நிலைய வளாகங்களிலும் சிறிய சிமெண்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்து அதன் தாகத்தை தணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.

விலங்குகள் நல உரிமைகள் ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக காவல்துறை பறவைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

அனைத்து உயிர்களையும் முடிந்தவரை பாதுகாக்க உதவி செய்வது முக்கியமாகும். கொரோனா காலத்தில் தீயணைப்பு நிலையங்களில் தண்ணீர் கிண்ணம் வைக்கப்பட்டதால் அதன் மூலம் பறவைகள் தாகத்தை தணித்துக் கொண்டது. அந்த பணி திருப்தியளித்தது.

போலீஸ் நிலையங்களில் உள்ள மரங்கள், பறவைகளுக்கு வீடுகளாக அமைந்தது. தொடர்ந்து பறவைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். உதவி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News