உள்ளூர் செய்திகள்

படிகட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை படத்தில் காணலாம்.

உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் அறிவுரை

Published On 2022-11-05 12:37 IST   |   Update On 2022-11-05 12:37:00 IST
  • கிராமப்புறங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் பள்ளி மாணவர்கள் இலவச பஸ்பாஸ் வசதிக்காக அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
  • ஒருசில மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல இந்த பஸ் மட்டுமே உள்ளது. தனியார் பஸ்சில் செல்ல பணம் இல்லை என்று தெரிவிக்கவே அவர்களுக்கு பஸ் டிக்கெட்டுக்கான கட்டணத்தை கொடுத்து அனுப்பி வைத்தார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினசரி ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் பள்ளி மாணவர்கள் இலவச பஸ்பாஸ் வசதிக்காக அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.

ஆனால் பெரும்பாலான வழித்தடங்களில் பள்ளிக்கு செல்லும் சமயத்திலும், திரும்பி வரும் சமயத்திலும் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே செல்லும் நிலை உள்ளது. கண்டக்டர்கள் மாணவர்களை உள்ளே வரும்படி எச்சரித்தாலும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் கண்டக்டர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

நேற்று மாலை வடமதுரை அருகே அரசு பஸ்சில் அதிகளவு மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடியே சென்றுகொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் அந்த பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை கூறி அடுத்து வரும் பஸ்சில் செல்லுமாறு கூறினார்.

மேலும் ஒருசில மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல இந்த பஸ் மட்டுமே உள்ளது. தனியார் பஸ்சில் செல்ல பணம் இல்லை என்று தெரிவிக்கவே அவர்களுக்கு பஸ் டிக்கெட்டுக்கான கட்டணத்தை கொடுத்து அனுப்பி வைத்தார்.

இந்த செயல் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிகம் செல்லும் பகுதியில் கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். தற்போது மழைக்காலமாக இருப்பதால் மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி மழையில் நனைந்தவாறு பயணிக்கும் நிலையும் உள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பல்வேறுஇடங்களில் ஆய்வு நடத்துவது இல்லை. மாலை நேரங்களில் பல மாணவர்கள் பஸ் கிடைக்காமல் இரவு வீடு திரும்பும் நிலை உள்ளது. எனவே இதுபோன்ற அவலங்களை போக்க போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News