யானைகள் உயிர் இழப்பை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம்
- மின்சாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கவோ, யானைகளுடன் செல்வி எடுப்பதோ மிகவும் ஆபத்தான செயலாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கான வன உயிரின காப்பாளர், மின்சாரத்துறை அலுவலர்கள், வேளாண் பொறியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, காவல் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளில் சிக்கியும், விவசாய நிலங்களில் கள்ளத்தனமாக அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளில் சிக்கியும் யானைகள் உயிரிழந்து வருகிறது.
வனப்பகுதிகள் மற்றும் வனத்திற்கு வெளியில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், வனத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது, குறைவான உயரத்தில் தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கவும், இரண்டு கம்பங்களுக்கு இடையிலான அதிக தொலைவுகளை சரி செய்து அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வனப்பகுதிக்கு வெளியில், விவசாய நிலங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் இதர வன உயிரினங்களை கட்டுப்படுத்த கள்ளத்தனமாக அமைக்கப்படும் மின் வேலிகளை வனத்துறை அலுவலர்கள் மின்சாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு, கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சோலார் மின் வேலி அமைக்க வேளாண் பொறியியல் துறை மூலம் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வரும் பகுதிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தணிக்கை செய்து, அதில் அனுமதிக்கப்பட்ட அளவு மின்சாரம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தனி தொழில்நுட்ப குழு அமைத்து, சோதனை செய்து, குற்றங்கள் நடைபெறாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கவோ, யானைகளுடன் செல்வி எடுப்பதோ மிகவும் ஆபத்தான செயலாகும். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் பட்சத்தில் அவற்றின் அருகே செல்லாமல் வனத்துறைக்கோ, காவல்துறைக்கோ உடனடியாக தகவல் அளித்தல் வேண்டும். வனத்துறையினரோ அல்லது காவல்துறையினரோ வரும் வரையில் யானைகளிடம் நெருங்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.