நல்லம்பள்ளி அருகே கல்குவாரி உரிமையாளர் மிரட்டியதால்வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
- நல்லம்பள்ளி அருகே கல்குவாரி உரிமையாளர் மிரட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- குவாரியில் வெடிவைத்து கற்களை தகர்க்கும் பொழுது கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்தனர்
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சந்தாரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் நடேசன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
அதே பகுதியில் பல வருடங்களாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வெடிவைத்து கற்களை தகர்க்கும் பொழுது அருகில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் கற்கள் விழுவதாகவும், ஒரு சில நேரங்களில் ஆடு, மாடுகள், பொது மக்களின் மீதும் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்கின்றனர்.
மேலும் கல்குவாரிக்கு அனுமதி முடிந்து ஒரு வருடம் நெருங்கும் நிலையில் மீண்டும் அனுமதி வாங்கி உள்ளார்களா என கேள்விக்குறியாக உள்ள நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கல்குவாரியை மூட வேண்டும் என பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று கல்குவாரிக்கு மிக அருகாமையில் உள்ள நடேசன் என்பவர் கல்குவாரியை மூட வேண்டும் என தொடர்ந்து புகார்களை அளித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கல்குவாரி உரிமையாளர், மற்றும் ஊழியர்கள் சில மாதங்கள் முன்பு நடேசன் குடும்பத்தாரை தரகுறைவாக பேசி நடேசன் மகன் சந்தோஷ்(20) என்பவரை அடித்ததாகவும், சில நாட்கள் முன்பு மீண்டும் வீட்டிற்கு நேரில் வந்து சந்தோஷ் மற்றும் அவருடைய தாயாரையும் மிரட்டியதால் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தோஷ் நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி உள்ளார்.
அவரைப் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.