உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் கூத்தக்குடியில் ஊராட்சி துணைத் தலைவரின் மகன் கொன்று புதைப்பு: 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-03-26 06:46 GMT   |   Update On 2023-03-26 06:46 GMT
  • ஜெய்சங்கர் மகன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
  • மது பாட்டிலால் தாக்கி கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்தது போலீசாருக்கு தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி, மார்ச்.26-

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் தொழு தூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் கல்லூரிக்கு செல்லவில்லை. இவர் 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெய்சங்கர் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்படி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (27) என்பவருக்கும் காணாமல் போன ஜெகன்ஸ்ரீ-க்கும் கடந்த கார்த்திகை தீபத்தன்று ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து அய்யப்பனை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அய்யப்பன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், அபிலரசன் மற்றும் 17 வயதுடைய மைனர் சிறுவன் ஆகியோருடன் ஜெகன் ஸ்ரீ-யை அழைத்து சென்று மது அருந்தியதாகவும், அப்போது மது போதையில் அய்யப்பன் மற்றும் 3 பேருடன் சேர்ந்து ஜெகன் ஸ்ரீ என்பவரை மது பாட்டிலால் தாக்கி கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்யநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர். அங்கே ஜெகன் ஸ்ரீ உடல் இருந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து புதைத்த அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஜெகன் ஸ்ரீ என்பவரது தாயார் செந்தமிழ் செல்வி கூத்தக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News