ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி - அடுத்த வாரம் தொடக்கம்
- நகல் கார்டுகள் மட்டும் மாவட்ட அளவில் அச்சடிக்க 2020ல் அனுமதி வழங்கப்பட்டது.
- மாவட்ட அளவிலேயே புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடலாம் என அரசு அறிவித்துள்ளது.
திருப்பூர் :
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வந்த பிறகு புதிய கார்டுகள், தனியார் நிறுவனத்தில் அச்சடித்து சென்னையில் இருந்து வழங்கப்பட்டது. நகல் கார்டுகள் மட்டும் மாவட்ட அளவில் அச்சடிக்க 2020ல் அனுமதி வழங்கப்பட்டது. புதிய கார்டு அச்சிடும் பணி தனியாரிடம் இருப்பதால், கார்டு வழங்க தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி மாவட்ட அளவில் புதிய ரேஷன் கார்டுகளையும் அச்சிட்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக புதிய கருவியும் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு வழங்கும் பணிக்காக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து புதிய கார்டு அச்சிட தடை விதிக்கப்பட்டது.
தற்போது பொங்கல் பரிசு வழங்கி முடித்துள்ள நிலையில், புதிய கருவியை பயன்படுத்தி மாவட்ட அளவிலேயே புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடலாம் என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மாவட்ட அளவில் புதிய கார்டுகள் அச்சிடும் பணியை துவக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக ரகசிய குறியீடு எண், கடவு சொல் ஆகியவை மாவட்டம் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 1800 முதல் 2500 கார்டுகள் வரை நிலுவையில் உள்ளன. கலெக்டர் அனுமதியை பெற்று ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி அடுத்த வாரத்தில் இருந்து துவங்கும் என்றனர்.