உள்ளூர் செய்திகள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

துணிப்பைகளின் பழக்கத்தை பொதுமக்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்

Published On 2023-02-28 08:32 GMT   |   Update On 2023-02-28 09:48 GMT
  • துணிப்பைகளின் பழக்கத்தை பொதுமக்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் அறிவுறுத்தினார்.
  • ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 1.1.2019 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது.

சிவகங்கை

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப் படுத்தும் விதமாகவும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மஞ்சப்பை தானியங்கி எந்திரம், நிறுவப்பட்டு உள்ளது.

இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 1.1.2019 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது. வருங்கால சந்ததி யினர்களின் நலனுக்கா கவும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கப்பதற்கும், பாரம்பரிய துணிப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவும், தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23.12.2021 அன்று "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்த மஞ்சப்பை தானியங்கி எந்திரத்தில்10 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது ஐந்து 2 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது பத்து 1 ரூபாய் நாணயங்களாகவோ செலுத்தி பொதுமக்கள் மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த எந்திரம் 24 மணி நேரமும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி அரசின் அறிவுரையின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து பாரம்பரிய வகையில் துணிப்பைகளின் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, உதவிப்பொறியாளர் சவுமியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News