உள்ளூர் செய்திகள்

சித்தலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை காணலாம்.

கல்வெட்டு-முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

Published On 2022-06-23 09:43 GMT   |   Update On 2022-06-23 09:43 GMT
  • சிவகங்கை அருகே பழமையான கல்வெட்டு-முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது.
  • இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு சிவகங்கையை சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட தொல் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல் நடைக்குழு நிறுவனர் கா.காளிராசா கூறியதாவது:-

சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கில் இருந்து செல்லும் பிரிவு சாலையில் இடப்பக்கம் இரண்டு அம்மன் கோவில்கள் காணப்படுகின்றன. கோவிலை ஒட்டி குவியலாகக் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்க பெற்றிருக்கிறது.

இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் 13-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என தெரிகிறது. மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது. சிவன் கோவில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம். இக்கல்வெட்டு அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோவிலில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.

இதுதவிர முத்தலூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான 15-க்கும் மேற்பட்ட தாழிகள் காணக்கிடைக்கின்றன. முத்தலூரில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட எச்சங்கள் உள்ள இடம் இன்றும் இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முத்தலூரை ஒட்டிய நாடகமேடை பகுதியில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண் காணப்படுகிறது.

இதில் கல், மோட்சம் போன்ற சொற்கள் இடம் பெற்றிருப்பதால் இது நினைவுக்கல் என்பதும், மோட்சம் கருதி தர்மம் செய்த செய்தி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

மேலும் இவ்விடத்திற்கு அருகில் வேம்பத்தூர் காரருக்கு பழமையான கட்டுமான நினைவிடம் ஒன்று இருப்பதாக இவ்வூரை சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் கள ஆய்வில் தெரிவித்தார். இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது. இதில் வட்டவடிவிலான சக்கரம் போன்ற அமைப்பும், அதில் 4 ஆரங்களும் உள்ளன.

Tags:    

Similar News