உள்ளூர் செய்திகள்

காலை, மாலை நேரங்களில் விரைவில் குடிநீர் விநியோகம்

Published On 2022-10-06 08:14 GMT   |   Update On 2022-10-06 08:14 GMT
  • காலை, மாலை நேரங்களில் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.
  • நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-

தேவகோட்டை நகரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசின் துணையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறுகள் நகரில் 3 இடங்களில் நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு விரைவில் தினமும் காலை, மாலை நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

நகரில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக தரம் உயர்த்தி மண் சாலை இல்லாத நகராக தேவகோட்டை மாற்றப்படும்.

மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் 6 வார்டு வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் மாநகரங்களுக்கு இணையாக இளைஞர்கள் தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தவாறு கல்வி கற்பதற்கு வசதியாக இலவச வை-பை வசதி செய்யப்படும். நவீன விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும். தினச்சந்தை, வாரச்சந்தைக்கான புதிய கட்டிடத்திற்கு மதிப்பீடும் பணி நடக்கிறது.

நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கால்வாய்களை மராமத்து செய்து சீர்படுத்தி குளங்கள் தூர்வாரப்படும். நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News