வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சீட்டு.
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஒரே கட்டணம்
- டிக்கெட் வழங்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்டேக் 3 கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
- முழுமையாக பணிகள் முடிந்த பின்னர் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அந்தந்த நுழைவுவாயிலில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய கட்டணமுறை அமல்படுத்தப்பட்டது. அதில் சுங்ககட்டணம், கார், பஸ், வேன், வாகன சான்றிதழ்கள் சரிபார்ப்பு என புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், முக்கிய நிர்வாகிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் மொத்தமாக ஒரே இடத்தில் ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. டிக்கெட் வழங்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்டேக் 3 கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டு அதிக வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார்பார்க்கிங்க அமைக்கப்பட்டு வருகிறது.
குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. முழுமையாக பணிகள் முடிந்த பின்னர் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சலுகை கட்டணத்தில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வனஅலுவலர் யோகேஸ்குமார் மீனா மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.