உள்ளூர் செய்திகள்

நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை

Published On 2025-07-20 11:07 IST   |   Update On 2025-07-20 11:07:00 IST
  • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதனைதொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இன்று சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுவதாய் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவியில் தண்ணீர் வரத்து சீரான உடன் உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என குற்றாலம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் குற்றாலம் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News