பள்ளிகளுக்கான கட்டிடப் பணிகளை ஜூன் 1ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்- ஆய்வு செய்த அதிகாரிகள் உத்தரவு
- சிமெண்ட், செங்கல்கள், கம்பிகள் தரமாக உள்ளதா என அளவீடு செய்தனர்.
- கட்டுமான பொருட்களின் தரம் குறைவாக காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 26 பழைய அரசு பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் தலா ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக சோம்பட்டு அரசூர், வண்ணிப்பாக்கம்,, சிறுவாக்கம், கொடூர், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, சின்னக்காவனம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அரசு பள்ளி வகுப்பறைகளை பொன்னேரி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, சேர்மன் ரவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிமெண்ட், செங்கல்கள், கம்பிகள் தரமாக உள்ளதா எனவும், வகுப்பறைகள் உரிய அளவுகளில் கட்டப்பட்டுள்ளதா எனவும் அளவீடு செய்தனர்.
பின்னர் ஒப்பந்ததாரர்களிடம், பள்ளி துவங்குவதற்கு முன்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் கட்டி முடித்து ஒப்படைக்கும் வகையில், கட்டிட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கட்டுமான பொருட்களின் தரம் குறைவாக காணப்பட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆய்வின்போது நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கொடூர் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், கவுன்சிலர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.