உள்ளூர் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீட்டிய திட்டத்தால் சசிகலா அதிர்ச்சி

Published On 2022-06-16 15:04 IST   |   Update On 2022-06-16 15:04:00 IST
  • பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினால்தான் வலுவான தலைவராக முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.
  • அ.தி.மு.க. கட்சிக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் திடீரென்று உருவாகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்பயே இருக்கும். அந்த பதவிகளை வைத்து கட்சியை வழி நடத்தி செல்லலாம் என்றே நினைத்திருந்தனர்.

ஆனால் திடீரென்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை என்ற கோஷத்தை முன் வைத்துள்ளனர். இந்த ஒற்றை தலைமை கோஷத்துக்கான பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

ஒன்று.... அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை வகித்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல எடப்பாடி பழனிசாமியும் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினால்தான் வலுவான தலைவராக முடியும் என்று நினைக்கிறார்.

அதற்கு ஏற்ப கட்சியில் 80 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையிலான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியால்தான் கட்சியை வழி நடத்தி செல்ல முடியும் என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள்.

இரண்டாவதாக, அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை பிடிக்க மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவேன் என்று சசிகலா கூறி வருகிறார். இந்த பொதுச்செயலாளர் பதவியால் சில சட்டரீதியான பிரச்சினைகளும் எழுகின்றன. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க பொதுச்செயலாளர் பதவி என்பதை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.

மூன்றாவதாக, அ.தி.மு.க. கட்சிக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இந்த சொத்துக்கள் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அசையா சொத்துக்காக உள்ளன. இந்த சொத்துக்களின் மூலம் கட்சிக்கு மாதம்தோறும் கணிசமான அளவுக்கு வருவாய் வருகிறது.

இந்த சொத்துக்களையும் வருமானத்தையும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த வருமானத்தை எடுத்து கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் சசிகலாவின் கையெழுத்து தேவைப்படுகிறது. அவர் கையெழுத்து போட்டால்தான் இந்த வருமானத்தை பயன்படுத்த முடியும் என்ற சட்ட பிரச்சினை இருக்கிறது.

இதனை எடப்பாடி பழனிசாமி அறிந்துகொண்டு பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற நினைக்கிறார். அதன் மூலம் அ.தி.மு.க.வில் வரும் வருமானம் மூலம் கட்சி பணிகளை செய்யலாம், கட்சியை வளர்க்கலாம், கட்சி தொண்டர்களுக்கு உதவலாம், அ.தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் செலவிடலாம், புதிய திட்டங்களை செயல்படுத்தலாம் என்று எடப்பாடி பழனிசாமி கருதகிறார்.

இதை செயல்படுத்த வேண்டுமென்றால் பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே முடியும். எனவேதான் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற தனது ஆதரவாளர்களுடன் பேசி ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். இதனால் தான் அ.தி.மு.க.வில் சர்ச்சை எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த ரகசிய திட்டத்தை அறிந்த சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று அவர் சிறுதாவூரில் உள்ள பங்களாவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் சில திட்டங்களை சசிகலா சொல்லி கொடுத்துள்ளார். அதன்படி செயல்பட்டால் எடப்பாடி பழனிசாமியின் முயற்சிகளை முறியடிக்கலாம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் உள்ளே அனுப்பி பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தார்.

அதற்கான கதவை எடப்பாடி பழனிசாமி அடைத்து விட்டார். அதோடு தனக்கு அதிகாரம் தரும் பொதுச்செயலாளர் பதவியை நோக்கியும் அவர் நகர்ந்து செல்கிறார். இதை தடுத்து நிறுத்துவதற்காகவே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை தூண்டி விடுகிறார்.

எனவே அ.தி.மு.க.வில் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற பரபரப்பு நாளுக்கு நாள் உருவாகி வருகிறது.

Tags:    

Similar News