மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் சாவு
- பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (42). இவர் தாசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.
சண்முகம் சொந்த மாடுகளை வளர்த்து வந்தார். அவர் தினமும் தனது வீட்டில் இருந்து ஆதனூர் பகுதியில் உள்ள தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு வந்து பால் ஊற்றி விட்டு பின்னர் வீடு திரும்பி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்க ம்போல் பால் கறந்து அதனை தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு கொடுத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சாலையை கடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சண்முகம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்முகத்தை மீட்டு அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.