உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் அரசு அலுவலகங்களின் அருகில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-08-13 08:42 GMT   |   Update On 2023-08-13 08:42 GMT
  • ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
  • அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையான மக்கள் தொகை கொண்டது ஆலங்குளம். மேற்கு பகுதியில் தாசில்தார் அலுவலகம் தொடங்கி அதனையொட்டி, கிழக்கு வரிசையில் சார்பதிவாளர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டி.எஸ்.பி. அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, அரசுக் கருவூலம், பீடித் தொழிலாளர் நல மருத்துவமனை பஸ் நிலையம் என சுமார் 500 மீட்டர் தொலைவுக்குள் 15-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இந்த அலுவகங்களை யொட்டியும், அருகிலும் ஓடை செல்கிறது. மழைநீர் ஓடையாக இருந்து இது தற்போது கழிவு நீரோடையாக மாறிவிட்டது.

இந்நிலையில் இந்த ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் அனைத்து அலுவக வளாகத்திலேயே சுற்றித் திரிகிறது.

குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே பழைய வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் மற்றும் கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுற்றித்திரிவதால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. முக்கிய பணிக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை இப்பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் கூறுகின்றன.

இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் பன்றிகள் வளர்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஆலங்குளத்தின் மேற்குப்பகுதி துர்நாற்றத்து டனேயே காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News