உள்ளூர் செய்திகள்

பாப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தம் அருகே வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் பஸ் வசதி கேட்டு சாலை மறியல்

Published On 2023-07-26 08:01 GMT   |   Update On 2023-07-26 08:01 GMT
  • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது.
  • இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படித்து வருகின்றனர்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது.

இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படித்து வருகின்றனர்.

இப்பள்ளிக்கு கொங்க ணாபுரம், வைகுந்தம், தாழையூர், வெள்ளையம் பாளையம், காளிப்பட்டி பிரிவு, இருகாலூர், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர்.

தனியார் வாகனம்

இவர்களுக்கு பஸ் வசதி இல்லாததால் தனியார் வாகனங்களில் மாதம் ரூ.2000 வரை கட்டணம் செலுத்தி தினமும் வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் 13-ம் எண் அரசு பஸ் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டாக காலை, மாலை வேளைகளில் பஸ் இயக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது.

இதனால் வடுகப்பட்டி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மறியல்

இதையடுத்து, தங்களுக்கு பஸ் வசதி அளிக்க வேண்டும் எனக் கேட்டு, பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று காலை 9 மணியளவில் வைகுந்தம் - வடுகப்பட்டி சாலையில், பாப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

மறியல் குறித்து தகவல் அறிந்து சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் வளர்மதி, திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சதாசிவம், சங்ககிரி ஆர்.டி.ஓ லோகநாயகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, 13-ம் எண் கொண்ட பஸ்சை பள்ளி நேரத்தில் காலை, மாலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாணவர்கள் சென்று வர போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால், சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News